Skip to main content


10 - ம் வகுப்பு அறிவியல் - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்




தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்



திசுக்கள்

  • அமைப்பு மற்றும் தோற்றத்தில் ஒன்றுபட்ட அல்லது வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் செல்களின் தொகுப்பே திசுக்கள் எனப்படும்
  • பகுப்படையும் திறனின் அடிப்படையில் திசுக்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
1.ஆக்குத் திசுக்கள்
2.நிலைத்தத் திசுக்கள்

திசுத் தொகுப்புகள்

  • சாக்ஸ்(1875) என்பவர் தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளார்
1.தோல் திசுத்தொகுப்பு அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
2.அடிப்படை அல்லது தளத்திசுத்தொகுப்பு
3.வாஸ்குலார் திசுத்தொகுப்பு

1.தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு

  • புறத்தோல் திசுத்தொகுப்பில், புறத்தோல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் ஆகியவை உள்ளன
  • ஒரு தாவரத்தின் வெளிப்புற அடுக்கு புறத்தோல் ஆகும். இவற்றில் பல சிறிய துளைகள் காணப்படுகின்றன. இவை புறத்தோல் துளை (ஸ்டோமேட்டா) எனப்படும்
  • தண்டு மற்றும் இலைகளின் வெளிப்புறச் சுவரில் கியூட்டிக்கிள் என்ற மெழுகுப்படலம் காணப்படுகிறது.கியூட்டிக்கிள் நீராவிப்போக்கினை தடுக்கிறது
  • புறத்தோலில் பல செல்களால் ஆன வளரிகள்(டிரைகோம்கள்) மற்றும் வேர்த்தூவிகள் காணப்படுகின்றன


புறத்தோல் திசுவின் பணிகள்

  • புறத்தோல் உட்புறத் திசுக்களைப் பாதுகாக்கிறது
  • புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவுகின்றன
  • வேர்த்தூவிகள் நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்ச பயன்படுகின்றன


2.அடிப்படை அல்லது தளத்திசுத்தொகுப்பு

  • புறத்தோலும் வாஸ்குலார் திசுக்களும் நீங்கலாக உள்ள அனைத்து திசுக்களும் இத்தொகுப்பில் அடங்கும்
  • இதில் புறணி, அகத்தோல், பெரிசைக்கிள்,பித் ஆகியவை உள்ளன


3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு

  • வாஸ்குலார் திசுத்தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என இரண்டு கடத்து திசுக்கள் உள்ளன
  • சைலம் நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது
  • புளோயம் உணவுப் பொருள்களை தாவரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகிறது
  • மூன்று வகையான வாஸ்குலார் கற்றைகள் உள்ளன
1.ஆரப்போக்கு அமைந்தவை
2.ஒன்றிணைந்தவை
3.சூழ்ந்தமைந்தவை

1. ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை

  • சைலமும், புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: வேர்


2. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை

  • சைலமும், புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன
  • இவற்றில் இரு வகைகள் உள்ளன
i)ஒருங்கமைந்தவை
ii)இருபக்க ஒருங்கமைந்தவை

i) ஒருங்கமைந்தவை

  • சைலம் மையப்பகுதியை நோக்கியும், புளோயம் வெளிப்புறத்தை நோக்கியும் அமைந்துள்ளன
  • சைலத்திற்கும், புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்பட்டால் அவை திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் (எ.கா:இருவித்திலைத் தாவர தண்டு) கேம்பியம் காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என்றும் அழைக்கப்படும் (எ.கா:ஒருவித்திலைத் தாவர தண்டு)


ii) இருபக்க ஒருங்கமைந்தவை

  • இவ்வகை வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குகர்பிட்டா



3. சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை

  • இவ்வகையில் சைலத்தைச் சூழ்ந்து புளோயமோ அல்லது புளோயத்தைச் சூழ்ந்து சைலமோ காணப்படும்


i) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

  • சைலம் புளோயத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படும். எடுத்துக்காட்டு: டிரசீனா


ii) புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை

  • புளோயம் சைலத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பாலிபோடியம்


உள்நோக்கிய சைலம் (எண்டார்க்)

  • புரோட்டோசைலம் மையத்தை நோக்கியும் மெட்டா சைலம் வெளிப்புறத்தை நோக்கியும் காணப்படுவது. எடுத்துக்காட்டு: தண்டு


வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்)
  • புரோட்டோசைலம் வெளிப்புறத்தை நோக்கியும் மெட்டா சைலம் மையத்தை நோக்கியும் காணப்படுவது. எடுத்துக்காட்டு: வேர்



இருவித்திலைத் தாவர வேரின் உள்ளமைப்பு (அவரை)




  • இருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் காணப்படுகின்றன

1. எபிபிளமா

  • வேரின் வெளிப்புற அடுக்கு எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ் எனப்படும்
  • இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூட்டிகிள் காணப்படவில்லை
  • ஒரு செல்லால் ஆன வேர்த்தூவிகள் காணப்படுகிறது
  • இது ரைசோடெர்மிஸ் அல்லது பைலிபெரஸ் அடுக்கு என்றும் அழைக்கப்படுகிறது


2. புறணி

  • இது பல அடுக்கு செல் இடைவெளிகளுடன் கூடிய நெருக்கமின்றி அமைந்த பாரன்கைமா செல்களால் ஆனது
  • இப்பகுதி நீர் மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கிறது


3. அகத்தோல்

  • புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும்
  • இது ஒரு வரிசையில் அமைந்த நெருக்கமான பீப்பாய் வடிவ செல்களால் ஆனது
  • இதன் ஆரச்சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டைகள் காணப்படுகிறது
  • பரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிராக அகத்தோலில் இந்த காஸ்பேரியன் பட்டைகள் காணப்படவில்லை
  • இச்செல்கள் வழிச்செல்கள் என அழைக்கப்படுகிறது
  • புறணியிலிருந்து நீர் மற்றும் இதர பொருட்கள் வழிச்செல்கள் வழியாக சைலத்தை அடைகின்றன

ஸ்டீல்

  • அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் அனைத்து பகுதிகளும் ஸ்டீல் எனப்படுகிறது இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் ஆகியவை அடங்கியுள்ளன
பெரிசைக்கிள்
  • அகத்தோலுக்கு உட்புறமாக காணப்படும் ஒரு அடுக்கு பாரன்கைமா செல்கள் ஆகும்
  • பக்க வேர்கள் இதிலிருந்து தான் தோன்றுகின்றன


வாஸ்குலார்த் தொகுப்பு

  • வாஸ்குலார் கற்றைகள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன
  • சைலம் வெளிநோக்கியவை மற்றும் நான்கு முனை கொண்டவை
  • சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே பாரன்கைமாவால் ஆன இணைப்புத்திசு உள்ளது


பித்

  • இளம் வேர்களில் நடுவில் பித் காணப்படும்
  • முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை




ஒருவித்திலைத் தாவர வேரின் உள்ளமைப்பு (சோளம்)

  • ஒருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் காணப்படுகிறது

எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ்

  • ஒருவித்திலைத் தாவர வேரின் வெளிப்புற அடுக்கு மெல்லிய சுவருடைய ஒரு அடுக்காலான பாரன்கைமா செல்களால் ஆனது
  • இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூட்டிகிள் காணப்படவில்லை
  • வேர்த்தூவிகள் மண்ணில் இருந்து நீர் மற்றும் கனிம உப்புக்களை உறிஞ்சுகின்றன
  • இவ்வடுக்கு உட்புறத் திசுக்களை பாதுகாக்கிறது

புறணி

  • புறணி பல அடுக்கு நெருக்கமற்ற பாரன்கைமா செல்களால் ஆனது
  • இவை நீர் மற்றும் உணவினைச் சேமிக்கின்றன

அகத்தோல்

  • புறணியின் கடைசி அடுக்கு அகத்தோல் ஆகும்
  • அகத்தோலில் காஸ்பேரியன் பட்டைகள் மற்றும் வழிச் செல்கள் காணப்படுகின்றன
  • காஸ்பேரியன் பட்டைகள் சூபரின் என்ற பொருளால் ஆன பட்டைகள் ஆகும்

ஸ்டீல்

  • அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த அனைத்து திசுக்களும் சேர்ந்து ஸ்டீல் எனப்படும்
  • இது பெரிசைக்கிள், வாஸ்குலார்த் தொகுப்புகள், பித் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

பெரிசைக்கிள்

  • இது ஓரடுக்கு மெல்லிய சுவருடைய பாரன்கைமா செல்களால் ஆனது
  • பக்கவாட்டு வேர்கள் இதிலிருந்து தோன்றுகின்றன

வாஸ்குலார் திசுக்கள்

  • வாஸ்குலார் திசுக்கள் ஆரப்போக்கு அமைவில் உள்ளன
  • பல முனைகளைக் கொண்ட புரோட்டோசைல கூறுகள் காணப்படுவதால் இவை பலமுனை சைலம் எனப்படும்
  • சைலம் வெளிநோக்கியவை
  • ஸ்கிளிரன்கைமாவாலான இணைப்புத்திசு உள்ளது

பித்

  • மையப்பகுதியில் பித் காணப்படுகிறது
  • இது செல் இடைவெளிகளுடைய பாரன்கைமா செல்களால் ஆனது
  • இந்த செல்களில் தரசம் போன்ற பொருள்கள் சேமிக்கப்பட்டுள்ளன




இருவித்திலைத் தாவர தண்டின் உள்ளமைப்பு (சூரியகாந்தி)

  • இருவித்திலைத் தாவர தண்டின் உட்புற அமைப்பில் கீழ்க்கண்ட திசுக்கள் காணப்படுகின்றன



புறத்தோல்

  • இது வெளிப்புற அடுக்காகும்
  • இது ஓரடுக்கால் ஆன பாரன்கைமா செல்களால் ஆனது
  • இதன் வெளிப்புறத்தில் கியூட்டிகிள் படலம் காணப்படுகிறது
  • புறத்தோலில் பணி உட்புறத்திசுவை பாதுகாப்பதாகும்

புறணி

  • புறணி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

புறத்தோலடித்தோல்

  • இது 3 முதல் 6 அடுக்குகளால் ஆன கோலன்கைமா செல்களால் ஆனது
  • இவ்வடுக்கு தாவரங்களுக்கு உறுதியைத் தருகிறது

மையப்புறணி

  • இது ஒரு சில அடுக்கு குளோரன்கைமா செல்களால் ஆனது
  • இதில் பசுங்கணிகங்கள் காணப்படுவதால் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கிறது

உட்புற புறணி

  • புறணியின் உட்புறப் பகுதியில் பாரன்கைமா செல்கள் சில அடுக்குகள் காணப்படுகிறது
  • இதன் பணி காற்று பரிமாற்றம் மற்றும் உணவு சேமித்தல் ஆகும்

அகத்தோல்

  • புறணியின் கடைசி அடுக்கு அகத்தோல் ஆகும்
  • இது ஓரடுக்கு பீப்பாய் வடிவ செல்களால் ஆனது
  • இதில் தரசம் காணப்படுவதால் தரச அடுக்கு எனவும் அழைக்கப்படுகிறது

ஸ்டீல்

  • அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும்
  • இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகிறது

பெரிசைக்கிள்

  • அகத்தோலுக்கும் வாஸ்குலார் கற்றைக்கும் இடையில் காணப்படும்
  • பல அடுக்கு பாரன்கைமா செல்களால் ஆன பகுதியாகும்
  • இதன் இடையிடையே ஸ்கிளிரென்கைமாவால் ஆன திட்டுகள் காணப்படுகின்றன

வாஸ்குலார் கற்றை

  • வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை

பித்

  • செல் இடைவெளிகளுடன் காணப்படும் பாரன்கைமாவாலான மையப்பகுதி பித் ஆகும்
  • இதன் பணி உணவுப்பொருட்களை சேமிப்பது ஆகும்




ஒருவித்திலைத் தாவர தண்டின் உள்ளமைப்பு (மக்காச்சோளம்)

  • ஒருவித்திலைத் தாவர தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன


புறத்தோல்

  • இது வெளிப்புற அடுக்காகும்
  • இது ஓரடுக்கு பாரன்கைமா செல்களால் ஆனது
  • இதன் வெளிப்புறச் சுவரில் கியூட்டிகிள் படிந்துள்ளது
  • பல செல் தூவிகள் காணப்படவில்லை
  • புறத்தோல் துளைகள் குறைவாக காணப்படுகின்றன

புறத்தோலடித்தோல்

  • இவ்வடுக்கு சில அடுக்கு ஸ்கிளிரென்கைமா செல்களால் ஆனது
  • இப்பகுதியின் இடையிடையே குளோரன்கைமா செல்கள் உள்ளன
  • ஸ்கிளிரன்கைமா தாவரங்களுக்கு உறுதியளிக்கிறது

தளத்திசு

  • புறத்தோலடித்தோலுக்கு உட்புறமாக உள்ள அனைத்து பகுதிகளும் தளத்திசு எனப்படும்
  • இவை அகத்தோல், புறணி, பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படவில்லை

வாஸ்குலார் கற்றை

  • மண்டை ஓட்டு வடிவ வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் காணப்படுகின்றன
  • வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்த, ஒருங்கமைந்த, மூடிய மற்றும் உள்நோக்கிய சைலம் கொண்டவை
  • ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றியும் ஸ்கிளிரென்கைமாவாலான கற்றை உறை உள்ளது

சைலம்

  • சைலக் குழாய்கள் ஆங்கில எழுத்து Y வடிவில் அமைந்துள்ளது
  • முதிர்ந்த வாஸ்குலார் கற்றையில் சில புரோட்டோசைலக் கூறுகள் சிதைவடைவதால் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இதற்கு புரோட்டோசைல இடைவெளி என்று பெயர்

புளோயம்

  • புளோயம் சல்லடைக்குழாய் கூறுகள், துணைச் செல்கள் மற்றும் பாரன்கைமாவினைக் கொண்டது
  • புளோயம் நார்கள் காணப்படவில்லை

பித்

  • மையத்தில் பித் காணப்படவில்லை




இருவித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலை - மா)

  • இருவித்திலைத் தாவர இலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன


மேல் புறத்தோல்

  • ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆனது
  • மேல்புறத்தோலின் வெளிப்புறத்தில் கியூட்டிகிள் படலம் உள்ளது
  • இலைத்துளைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன

கீழ் புறத்தோல்

  • வெளிப்புறத்தில் கியூட்டிக்கிளுடன் ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது
  • இதில் பல இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது
  • இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன

இலையிடைத் திசு


  • மேல்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு மீசோபில் எனப்படும்
  • இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன

பாலிசேட் பாரன்கைமா

  • மேல்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது
  • நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள் அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது
  • இக்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன

ஸ்பாஞ்சி பாரன்கைமா

  • இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது
  • இதில் கோள வடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி, செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன
  • இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது


வாஸ்குலார் கற்றைகள்

  • வாஸ்குலார் கற்றைகள் மைய நரம்பில் மற்றும் பிற நரம்பு பகுதிகளில் அமைந்துள்ளது
  • வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை
  • ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன கற்றை உறை உள்ளது
  • வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத் தோலை நோக்கியும்,புளோயம் கீழ்ப்புறத் தோலை நோக்கியும் அமைந்துள்ளது





ஒருவித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (இருபுறமும் ஒத்த அமைப்புடைய இலை - புல்)

  • ஒருவித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பில் கீழ்க்கண்ட பகுதிகள் காணப்படுகின்றன


புறத்தோல்

  • மேல்புறத் தோல் மற்றும் கீழ்ப்புறத் தோல் காணப்படுகிறது
  • புறத்தோல் ஆனது பாரன்கைமா செல்களால் ஆனது
  • இரண்டு புறத்தோலின் வெளிப்புறமும் கியூட்டிக்கிள் படலமும்,புறத்தோல் துளை(ஸ்டோமேட்டா)களும் உள்ளன
  • மேல்புறத் தோலின் சில செல்கள் மெல்லிய சுவருடன் பெரிதாக உள்ளது
  • இவை புல்லிபார்ம் செல்கள் எனப்படுகின்றன

இலையிடைத்திசு

  • மேல்புறத்தோலுக்கும் கீழ்ப்புறத்தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு இலையிடைத்திசு எனப்படும்
  • இலையிடைத்திசு பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது
  • செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன

வாஸ்குலார் கற்றைகள்

  • அளவில் சிறியதும் பெரியதுமான பல வாஸ்குலார் கற்றைகள் காணப்படுகின்றன
  • ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமா செல்களால் ஆன கற்றை உறை உள்ளது
  • வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை
  • வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத் தோலை நோக்கியும்,புளோயம் கீழ்ப்புறத் தோலை நோக்கியும் அமைந்துள்ளது




கணிகங்கள்

  • தாவரங்கள் மற்றும் ஆல்காக்களின் கணிகங்கள் இரட்டைச்சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகள் ஆகும்
  • இவை உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பதில் ஈடுபடுகின்றன
  • மூன்று வகையான கணிகங்கள் உள்ளன

1.பசுங்கணிகம் (குளோரோபிளாஸ்ட்) - பச்சை நிறமுடைய கணிகம்
2.வண்ணக்கணிகம்(குரோமோபிளாஸ்ட்) - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறமுடைய கணிகம்
3.வெளிர்க்கணிகம்(லியூக்கோபிளாஸ்ட்) - நிறமற்ற கணிகம்

பசுங்கணிகத்தின் அமைப்பு


  • பச்சைய நிறமிகளைக் கொண்டுள்ள கணிகம் பசுங்கணிகம்
  • பசுங்கணிகம் 2 - 10 மைக்ரோமீட்டர் விட்டமும், 1 - 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பு ஆகும்

உறை

  • பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது

ஸ்ட்ரோமா

  • சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி உள்ளது இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன

தைலக்காய்டு

  • ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பை போன்ற தட்டு வடிவ அமைப்பு காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர்
  • பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது

கிரானா

  • பல கிரானாக்கள் ஒன்றோடென்று கிரானா லேமெல்லா அல்லது ஸ்ட்ரோமா லேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது
  • தைலக்காய்டில் ஒளிச்சேர்க்கைக்கான நிறமிகள் உள்ளன


பசுங்கணிகத்தின் பணிகள்

  1. ஒளிச்சேர்க்கை
  2. தரசம் சேமித்தல்
  3. கொழுப்பு அமிலஉற்பத்தி
  4. லிப்பிடுகள் சேமிப்பு
  5. பசுங்கணிகம் உருவாக்கம்


ஒளிச்சேர்க்கை

  • ஒளிச்சேர்க்கை என்பது தற்சார்பு ஊட்ட உயிரினங்களான ஆல்காக்கள், தாவரங்கள்,பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஆகும்
  • இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீரின் உதவியால் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது இந்நிகழ்ச்சியின்போது ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது


6CO2+12H2O------->C6H12O6+6H2O+6O2
கார்பன் டை ஆக்சைடு + நீர் ---------> குளுக்கோஸ் + நீர் + ஆக்சிஜன்

ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்

  • பசுந்தாவரங்களில் ஒளிச்சேர்க்கையானது இலைகள், பசுமையான தண்டுகள் மற்றும் மலர் மொட்டுகள் ஆகிய உறுப்புகளில் நடைபெறுகிறது


ஒளிச்சேர்க்கை நிறமிகள்

  • ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் நிறமிகள் ஒளிச்சேர்க்கை நிறமிகள் எனப்படுகின்றன
  • இரண்டு முக்கிய நிறமிகள் உள்ளன

முதன்மை நிறமிகள்
துணை நிறமிகள்

முதன்மை நிறமிகள்

  • பச்சையம் a முதன்மை நிறமி ஆகும்
  • இவை சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகும்
  • இந்த நிறமியானது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது. எனவே இது வினை மையம் என்று அழைக்கப்படுகிறது


துணை நிறமிகள்

  • பச்சையம் b மற்றும் கரோட்டினாய்டு போன்றவை துணை நிறமிகள் ஆகும்
  • இவை சூரிய ஆற்றலை கவர்ந்து முதன்மை நிறமிக்கு அனுப்பி விடும்
  • முதன்மை நிறமி (வினை மையம் - பச்சையம் a) மற்றும் துணை நிறமிகள் (ஏற்பி நிறமி மூலக்கூறுகள் மையம்) இரண்டும் சேர்ந்து ஒளித்தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது


ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கு

  • ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது
  • ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும்,ஒளி சாரா வினை அல்லது இருள் வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது


ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை (ஹில்வினை)

  • இது ராபின் ஹில்(1939) என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது
  • இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலகாய்டு சவ்வில் நடைபெறுகிறது
  • ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன


ஒளி சாரா வினை அல்லது இருள் வினை(உயிர்பொருள் உற்பத்தி நிலை)

  • இந்நிகழ்ச்சியின்போது ஒளி சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது
  • இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது
  • இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது
  • இதற்கு சூரிய ஒளி தேவை இல்லை
  • கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம் உள்நுழைகிறது


ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள்
உட்புறக் காரணிகள்

  1. நிறமிகள்
  2. இலையின் வயது
  3. கார்போஹைட்ரேட்டின் செறிவு
  4. ஹார்மோன்கள்


வெளிக்காரணிகள்

  1. சூரிய ஒளி
  2. கார்பன் டை ஆக்சைடு
  3. வெப்பநிலை
  4. நீர்
  5. கனிமங்கள்


மைட்டோகாண்ட்ரியா

  • செல்லில் காணப்படும் இழை போன்ற அல்லது துகள் போன்ற சைட்டோபிளாச நுண்ணுறுப்பு மைட்டோகாண்ட்ரியாவாகும்
  • இவற்றை முதன்முதலில் 1857 ஆம் ஆண்டு கோலிக்கர் என்பவர் வரித்தசைச் செல்களில் கண்டறிந்தார்
  • செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படும் ATP மைட்டோகாண்ட்ரியாவில் உற்பத்தியாவதால் மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகிறது
  • மைட்டோகாண்ட்ரியாவின் அளவு .5 மைக்ரோமீட்டர் முதல் 2 மைக்ரோமீட்டர் வரை பல்வேறு அளவுகளில் வேறுபட்டு காணப்படுகிறது
  • மைட்டோகாண்ட்ரியாவில் 60 - 70 % புரதம், 25 - 30% லிப்பிடுகள், 5 - 7 % RNA,DNA மற்றும் கனிமங்களும் உள்ளன


மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு



மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வுகள்

  • உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்ட ஒரு நுண்ணுறுப்பாகும்
  • ஒவ்வொரு சவ்வும் 60 - 70 A° தடிமனுடையது வெளிச்சவ்வானது வழவழப்பானது.அனைத்து மூலக்கூறுகளையும் உட்செல்ல அனுமதிக்கும். இதில் நொதிகள்,புரதம் மற்றும் லிப்பிடுகள் காணப்படுகின்றன.இச்சவ்வில் உள்ள போரின் மூலக்கூறுகள் (புரத மூலக்கூறுகள்) வெளி மூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது
  • உட்புறச் சவ்வு பல மடிப்புகளுடன் காணப்படுகிறது.இவை ஒரு தேர்வுகடத்து சவ்வாகவும், குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே செல்ல அனுமதிக்கும். இதில் கடத்துப் புரதங்களும்,நொதிகளும் உள்ளன‌. இதில் 80 சதவீதம் புரதம் மற்றும் லிப்பிடுகள் உள்ளன


கிரிஸ்டே

  • உட்புறச் சவ்வில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் கிரிஸ்டே எனப்படும். இந்த கிரிஸ்டேவானது பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளைப் பெற்றுள்ளன


ஆக்ஸிசோம் அல்லது F1 துகள்கள்

  • கிரிஸ்டேவில் பல நுண்ணிய டென்னிஸ் ராக்கெட் வடிவ துகள்கள் காணப்படுகின்றன இவை ஆக்ஸிசோம்கள் என அழைக்கப்படுகின்றன
  • இவை ATP உற்பத்தியில் பங்குகொள்கின்றன


மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ்

  • புரதம் மற்றும் லிப்பிடுகளைக் கொண்ட ஒரு சிக்கலான கலவையாகும்
  • இதில் கிரப் சுழற்சிக்குத் தேவையான நொதிகள், 70s ரைபோசோம்,tRNA க்கள் மற்றும் DNA ஆகியவை உள்ளன


மைட்டோகாண்ட்ரியாவின் பணி

  • சுவாசித்தலுக்குத் தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பாகும். இதில் ஏராளமான ATPக்கள் உருவாகின்றன. எனவே இது செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது
  • செல்லின் கால்சியம் அயனிகளின் சமநிலையைப் பாதுகாக்கிறது
  • செல்லின் வளர்சிதை மாற்ற செயலில் பங்கு கொள்கிறது



சுவாசித்தலின் வகைகள்

  • சுவாசித்தல் என்பது உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சி ஆகும்
  • தாவரங்கள் வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெற்றுக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இந்த வாயு பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்
  • செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர் வேதியியல் நிகழ்ச்சியே செல் சுவாசம் எனப்படும்

காற்று சுவாசம்

  • இவ்வகை செல் சுவாசத்தில் உணவானது ஆக்சிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது
  • இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது
C6H12O6+6O2------->6CO2+6H2O+ATP

காற்றுச் சுவாசத்தின் படிநிலைகள்
கிளைக்காலிஸிஸ்(குளுக்கோஸ் பிளப்பு)

  • இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்
  • இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
  • இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது ஆகும்



கிரப் சுழற்சி

  • இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது
  • கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்சிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்


எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு

  • மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச் சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது
  • கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ஆக ஆக்ஸிகரணமடைகின்றன
  • இந்நிகழ்ச்சியின்போது வெளியான ஆற்றல் ADPயால் எடுத்துக்கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது. இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்
  • இந்நிகழ்ச்சியின்போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக ஒடுக்கமடைகிறது


காற்றில்லா சுவாசம்

  • காற்றில்லா சூழலில் அதாவது ஆக்சிஜன் இல்லாத சூழலில் நடைபெறும் சுவாசம் ஆகும்
  • இதில் குளுக்கோசானது எத்தனாலாகவும் (தாவரங்களில்) அல்லது லேக்டோஸ் ஆகவும் (சில பாக்டீரியங்களில்) இங்கு மாற்றப்படுகிறது .உடன்  CO2 வெளியேறுகிறது
C6H12O6------>2CO2+2C2H5OH+ஆற்றல் (ATP)

சுவாச ஈவு

  • சுவாசித்தலின் போது வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்சிஜன் அளவிற்கும் இடையே உள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்
சுவாச ஈவு = வெளியிடப்படும் CO2 அளவு/எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு







Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...