6 - ம் வகுப்பு தமிழ் - எல்லாரும் இன்புற
பராபரக் கண்ணி
பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.இவர் திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் பெருங்கணக்கராகப் பணிபுரிந்தவர். தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலை தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்
நீங்கள் நல்லவர்
நீங்கள் நல்லவர் பாடலை எழுதியவர் லெபனான் நாட்டைச் சேர்ந்த கலீல் ஜிப்ரான்.இவர் கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் என பன்முக ஆற்றல் பெற்றவர்.
பசிப்பிணி போக்கிய பாவை
இந்நூலை எழுதியவர் - எஸ். ராமகிருஷ்ணன்
இவர் உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
1.பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இது உயிருள்ள பொருள்களையும், உயிரற்றப் பொருட்களையும் குறிக்கும்
எடுத்துக்காட்டு: மரம், செடி, மயில், பறவை
2.இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: சென்னை, பள்ளி, பூங்கா, தெரு
3.காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு
4.சினைப்பெயர்
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: கண், கை, இலை, கிளை
5.பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: வட்டம், சதுரம், செம்மை, நன்மை
6.தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: படித்தல், ஆடுதல், நடித்தல்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இரு வகைப்படும்
- இடுகுறிப்பெயர்
- காரணப்பெயர்
1.இடுகுறிப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் ஆகும்
எடுத்துக்காட்டு: மண், மரம், காற்று
இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறிச் சிறப்புப் பெயர்
1.இடுகுறிப் பொதுப்பெயர்
நம் முன்னோர் காரணம் ஏதுமின்றி, பொதுத் தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: மரம், பழம்
2.இடுகுறிச் சிறப்புப் பெயர்
நம் முன்னோர் காரணம் ஏதுமின்றி சிறப்புத் தன்மை கருதி ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர் இடுகுறிச் சிறப்புப் பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: மா, வாழை
2.காரணப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிச் சில பெயர்களை இட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: நாற்காலி, கரும்பலகை
காரணப்பெயர் இருவகைப்படும்
- காரணப் பொதுப்பெயர்
- காரணச் சிறப்புப் பெயர்
1.காரணப் பொதுப்பெயர்
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது காரணப் பொதுப்பெயர் எனப்படும்
எடுத்துக்காட்டு: பறவை, அணி
2.காரணச் சிறப்புப் பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச் சிறப்புப் பெயர் ஆகும்
எடுத்துக்காட்டு: வளையல், மரங்கொத்தி
Comments
Post a Comment